எரிக்ஸன் நிறுவனத்தை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் அனில் அம்பானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவுசெய்துள்ளது.
ஸ்வீடன் தொலைத்தொடர் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்திற்கு இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 500 கோடி நிலுவை தொகை தர வேண்டியிருந்தது. இந்த தொகையை பெறுவதற்கு எரிக்ஸன் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுர்ந்தது. அதனை விசாரித்த தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மார்ச் 19-ம் தேதிக்குள் ரூ.500 கோடியை எரிக்ஸன் நிறுவனத்திற்கு கொடுக்காவிட்டால் அனில் அம்பானி சிறைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த தொகையை முகேஷ் அம்பானியின் உதவியுடன் அனில் அம்பானி நேற்று திருப்பி செலுத்தினார்.
இந்த நிலையில் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனிடமிருந்து ரூ.700 கோடியை மீட்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவு செய்துள்ளது.
கடன் சுமை, நிதி நெருக்கடி போன்றவற்றுக்கு ஆளாகியுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தர வேண்டிய ரூ. 700 கோடி தொகை நிலுவையில் உள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சம்பளம் தரவில்லை எனும் குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.