டெல்லி செங்கோட்டையில் 6 வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு உரையாற்றினார். விடுதலைக்காக போராடியவர்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்தனர். பலர் தங்கள் இளமை காலத்தை சிறையில் கழித்தனர்.
புதிய அரசு அமைந்த பிறகு மீண்டும் உங்கள் கௌரவத்தை ஏற்கும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் சேவை செய்வதற்கு அளித்த வாய்ப்புகளில் ஒரு இழையை கூட விட்டுவைக்காமல் பணியாற்ற உறுதியளிப்போம். காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் படேலின் கனவு நனவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி செய்தவர்கள் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவரவில்லை. இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகள் உரிமைக்காக முத்தலாக் முறை நீக்கப்பட்டது. இஸ்லாமிய நாடுகளும் கூட முத்தலாக்கை நீக்கிவிட்டன ஏனோ இந்தியாவில் பழங்காலமாக அது சாத்தியமில்லாமல் போய் இருந்தது. உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு, குழந்தை திருமணம் ஒழிப்பு போன்றது முத்தலாக் ஒழிப்பு.
குழந்தைகள் நலனுக்காகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். அனைத்து பிரிவினருக்கும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொடர்ந்து செய்வோம். ஒரே நாடு ஒரே அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம். மக்களின் கனவுகளை நிறைவேற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். வறுமையை ஒழிக்க ஏராளமான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.
மேலும் நீர் இன்றி அமையாது உலகு என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் பேசிய பிரதமர் மோடி, தண்ணீர் பஞ்சத்தை போக்கி வீட்டிற்கே தண்ணீர் கொண்டுவரும் ஜல்ஜீவன் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய 3.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.