மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.
இதனிடையே பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்று வருகிறது. இதில் அக்கட்சியை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் பங்கேற்காதது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் நடக்கும் இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா பங்கேற்கவில்லை. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள- காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க முயலும் நிலையில் 2 எம்எல்ஏக்களை காணவில்லை.
முன்னதாக, பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை தொடங்கியது . இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் 12 எம்.எல்.ஏக்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்கள் 2 பேர் காணவில்லை என்ற சம்பவம் கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.