சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாமென கடந்த மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக இதுவரை இரண்டாயரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளது கேரள அரசு.
இந்தநிலையில் கேரள மாநிலம் கண்ணுரில் விமான நிலையம் மற்றும் பாஜக-வின் புதிய அலுவலகம் ஆகியவற்றைத் திறந்து வைக்க கேரளா சென்ற அக்கட்சித் தலைவர் அமித் ஷா, அந்த சுற்று பயணதில் மக்கள் மத்தியில் உரையாடினார். அவர் பேசுவதற்கு முன் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று தன் பேச்சைத் தொடங்கினார்.
பின் அவர் பேசியதாவது, கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற போர்வையில் சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கிறது. சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோரை கேரள இடதுசாரி அரசு கைது செய்துள்ளது. பகத்தர்களுடன் பாஜக எப்போதும் அவர்களுக்கு அரணாக மலைபோல் துணைநிற்கும். நெருப்புடன் விளையாடும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை இதுவரையில் அமல்படுத்தாத கேரள இடதுசாரி அரசு சபரிமலை விவகாரத்தில் மட்டும் அவசரப்படுவது ஏன் என்றும் சபரிமலை பக்தர்களின் உணர்வுகளை சீர்குலைக்க நினைப்பது எதனால் என்றும் கேள்வி எழுப்பினார்.