வாரணாசி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைக்கவேண்டுமென தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 2019 மக்களவைத் தேர்தலின் போது, விவசாய விளை பொருள்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், காவிரி - கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.
இதனைக் கண்டித்து இத்தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் எங்கள் சங்கம் சார்பில் 111 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்திருந்தோம். இதற்காக, விவசாயிகளின் நிலையை உணர்த்தும் விதமாக நிர்வாணமாக காசிக்கு சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஏப்ரல் 30 ஆம் தேதி திருச்சியில் 126 பேருக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. இதில், 9 ஆம் தேதி 39 பேருக்கு இடம் கிடைத்தது. ஆனால் 10 ஆம் தேதி திருச்சியில் ரயிலில் ஏறிய பிறகு விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், தஞ்சாவூரிலும், பின்னர் விழுப்புரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டோம். தனி பெட்டி வழங்கப்படும் என்றனர். ஆனால் வழங்கப்படவில்லை பின்னர் செங்கல்பட்டில் எங்களை கைது செய்து அன்று மாலை விடுவித்தனர். இது தவறு.
இந்தியா ஜனநாயக நாடு, இங்கு எல்லோருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆனால், விவசாயிகள் மட்டும் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுப்பது தவறு. எனவே, வாரணாசி தொகுதியில் தேர்தலை ஒத்தி வைத்து, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவையும் 20 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பி முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி இல்லாவிட்டால், இன்று(13 ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்படும். அங்கும் நியாயம் கிடைக்காவிட்டால் தில்லியில் சாகும் வரை ஆயிரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.