புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியாக ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “ பலவீனமான மோடி ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட அவரது வாயில் இருந்து வரவில்லை" என பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதில் அளித்து பாஜக சார்பில் ட்விட்டரில் பதில் பதிவு போடப்பட்டுள்ளது. அதில், "உங்கள் கொள்ளுத்தாத்தா மட்டும் ஐ.நா.வில் சீனாவுக்கு இடத்தைப் பரிசாகத் தராமல் இருந்திருந்தால், சீனா ஐ.நா.வில் இடம் பெற்றிருக்காது. தேசத்தின் அனைத்து தவறுகளையும் உங்கள் குடும்பம் தான் செய்துள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா வெல்லும் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். இந்த விவகாரத்தை பிரதமர் மோடியிடம் விட்டுவிட்டு சீனத் தூதுவர்களுடன் ரகசியமாக நீங்கள் நட்பு பாராட்டுங்கள்" என பதிலடி தரப்பட்டுள்ளது.