டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் வெற்றியை காட்டிலும் தற்போது நடைப்பெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரு பங்கு இடங்களை கைப்பற்றி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்போம் என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவித்துவிட்டோம். அதே போல் எதிர்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு எதிர்கட்சிகள் இருட்டறையில் பிரதமர் வேட்பாளரை வைத்திருப்பார்கள் என எதிர்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார். மேலும் அவர் கூறுகையில் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இப்போதும் வைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மோடியா, சோனியாவா , மன்மோகன் சிங்கா என்ற போட்டி நிலவியது. ஆனால் தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் எந்த வித போட்டியும் ஏற்படவில்லை என கூறினார்.