மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், அந்த பட்ஜெட்டில் சாமானியர்கள், ஏழைகள் உள்ளிட்டோருக்கு எதுவுமேயில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் பட்ஜெட்டிற்கு அத்திருப்தி தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் சந்திரசேகர ராவ் பேசியதாவது; பாஜக மத்தியில் இருந்து அகற்றப்பட்டு, வங்கக் கடலில் வீசப்பட வேண்டும். நாட்டுக்கு எது தேவையோ அதை நாங்கள் செய்வோம். அமைதியாக உட்கார்ந்திருக்கமாட்டோம். இதுதான் ஜனநாயகம். நமது பிரதமர் மிகவும் குறுகிய நோக்குடையவர்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்த மும்பை செல்லவுள்ளேன். இந்த நாட்டிற்கு என்ன தேவையோ அதை செய்ய தொடங்குவோம். நம் நாடு வலுவாக உள்ளது, எங்கு தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் நாடு எதிர்வினையாற்றுகிறது என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். மாற்றத்திற்கான, புரட்சிக்கான தேவை இருக்கிறது. நாம் போராடாதவரை, மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
நமது அரசியலமைப்பை மாற்றி எழுத வேண்டும். புதிய சிந்தனை, புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.அரசியலமைப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.