மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவின் செயற்குழு கூட்டம், கரோனா காரணமாகக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருந்துவந்தது. இந்தச் சூழலில் கடந்த மாதம் அக்கட்சியின் செயற்குழு மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், பாஜகவின் செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த செயற்குழு கூட்டத்தில் அண்மையில் நடந்து முடிந்த பல்வேறு மாநில இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், அடுத்து நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில், 100 கோடி தடுப்பூசி சாதனைக்காகப் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த கூட்டத்தில், பாஜக பெரிய அளவில் வளராத மாநிலங்களிலும், அடுத்துத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களிலும் கட்சியை வளர்ப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. பாஜக பெரிய அளவில் வளராத மாநிலங்களிலும், அடுத்துத் தேர்தலைச் சந்திக்கவுள்ள மாநிலங்களிலும் அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்குள் 10,40,000 பூத் கமிட்டிகள் அமைக்க இந்த செயற்குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2022 மே-க்குள் பிரதமர் மோடியின் மன் கீ பாத் பூத் மட்டத்தில் நிறுவனமயமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக இனிமேல்தான் உச்சத்தை தொடபோகிறது எனவும், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலங்கானாவில் பாஜக தனது காலடித்தடத்தை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.