Skip to main content

‘மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டார்’ - காங்கிரஸ் மீது பா.ஜ.க வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
BJP made by allegation on congress Malligarjuna Karke was insulted at Priyanka Gandhi's nomination filing

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். 

தேர்தல் அரசியலில் முதல் முறையாக களமிறங்கும் பிரியங்கா காந்தி,  நேற்று (23-10-24) வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனி தாக்கல் செய்வதற்கு முன்பு வாகண பேரணியில் அவர் கலந்து கொண்டார். அந்த பேரணியில், சோனியா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் போது அறையின் கதவு வழியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பார்க்கும் காட்சியை பா.ஜ.கவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகின்றனர். பா.ஜ.கவினர் குற்றம்சாட்டும் அந்த வீடியோவில், மல்லிகார்ஜுன கார்கே, வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்த போது அறையின் கதவு வழியாக பார்ப்பது போல் இருக்கிறது. 

இந்த காட்சிகளை முன்வைத்து, மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்துவிட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் காங்கிரஸை விமர்சனம் செய்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், “முதல் குடும்பமான பிரியங்கா வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தபோது, கார்கேவை வெளியே வைத்துள்ளனர். ஏனென்றால், அவர் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. சோனியா காந்தி குடும்பத்தின் ஆணவம், உரிமையின் பலிபீடத்தில் சுயமரியாதை மற்றும் கண்ணியம் பலி கொடுக்கப்பட்டது. மூத்த பட்டியலின தலைவர் மற்றும் கட்சியின் தலைவரை இப்படி நடத்தினால், வயநாட்டு மக்களை எப்படி நடத்துவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க வைத்த குற்றச்சாட்டுக்கு, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது, “அப்பட்டமான பொய்யை கூறியிருக்கிறார்கள். தேர்தலைப் பற்றியும், வேட்பாளரைத் தவிர எந்த நேரத்தில் எத்தனை பேர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் நல்லது. கார்கே, சோனியா மற்றும் ராகுல்  ஆகியோர் உள்ளே வருவதற்கு முன்பு சிலர் வெளியேறும் வரை காத்திருந்தனர். இப்போது இந்த படங்களைப் பார்த்து வாயை மூடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்