புதுச்சேரியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு கவச உடை முறையாக வழங்கப்படவில்லை என அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் ஒருவர் கண்ணீருடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், மருத்துவ பணியாளர்களுக்கு தரமான கவச உடை வழங்கப்படுவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா சிகிச்சை மற்றும் நோய்த் தடுப்பு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்குப் பாதுகாப்பு உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு நேரு எம்.எல்.ஏ ஆய்வுக்கு சென்ற போது, கரோனா நோயாளிகளுக்கு மத்தியில் இறந்தவர்களின் சடலம் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், சில நோயாளிகளுக்கு நாற்காலியில் அமர வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து, கேட்ட போது அங்கிருந்த செவிலியர்கள் ‘எங்களிடம் இருக்கும் வசதியை வைத்து சிகிச்சை அளிக்கிறோம்’ என்றனர். அதேசமயம் செவிலியர்களுக்கு போதிய பணி பாதுகாப்பு இல்லாததால் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதனிடையே புதுச்சேரி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் தங்களுக்கு தரமான கவச உடை கூட வழங்கப்படவில்லை எனக் கண்ணீருடன் பேசும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில், “எங்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை. தரமான பி.பி.இ கிட் வாங்கிக் கொடுத்தால் போதும். நான் சுகாதாரத்துறை அதிகாரிகள், கவர்னருக்கு எல்லாம் லெட்டர் போட்டுட்டேன். எங்களுக்குத் தரமான பிபிஇ கிட் கிடைக்கவே இல்லை. இப்ப இருக்கிற பிபிஇ கிட்டை ஒரு மணிநேரம் கூட போட முடியவில்லை. ஒரு மணி நேரம் கழிச்சு மூச்சுத் திணறல் வந்து பசங்க ( செவிலியர்கள்) கிட்டை கழற்றிடராங்க. நாங்க எவ்வளவு தான் மன்றாடுவது? ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறோம். இங்க நடக்கறது வெளியில் சொல்லக்கூடாது என்று எவ்வளவு நாள் தான் இருக்கிறது.
சாதாரண நாட்கள் என்றால் நாங்க ஸ்ட்ரைக் பண்ணுவோம். இந்த நேரத்தில் பண்ணுனா மக்கள் என்ன சொல்லுவாங்க? நாங்களே இரண்டு முறை சில பேர் கிட்ட ஸ்பான்சர் வாங்கி பிபிஇ கிட் வாங்கி இருக்கிறோம். ஸ்பான்சர் பன்றவங்க எத்தனை நாளைக்கு பண்ணுவாங்க? எங்களுக்கு நஷ்ட ஈடு வேணாம், ஊக்கத்தொகை வேணாம், போனஸ் வேணாம். உயிர் பாதுகாப்பு தந்தா போதும். நாங்க வேலை செய்யத்தான் வந்தோம், நிச்சயம் செய்வோம். அதுக்கு நல்ல கவச உடை வேணும். இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்கப் போறாங்கன்னு தெரியல. தினமும் எங்கள்ல சில பேர் சாகுறாங்க. மற்றவங்க மன அழுத்தத்தில் இருக்காங்க. நாங்க அவங்களையும் பார்க்க வேண்டி இருக்கு. நீங்க எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு பிபிஇ கிட் வாங்கி கொடுங்க இந்த கவர்மெண்ட்ட வலியுறுத்துங்கள், அது போதும்” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தரமற்ற பாதுகாப்பு கவச உடைகள் (பிபிஇ கிட்) கொடுக்கப்பட்டதாகச் செவிலியர் கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பரவுகிறது. உண்மையில் தரமான கவச உடைகள் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. எந்த பாரபட்சமும் இல்லை என்று, இதைப் பற்றி நான் விசாரித்த போது அதிகாரிகள் கூறினார்கள். மருத்துவமனைகளுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்க்கச் சென்றபோது நானும், சுகாதாரத்துறை செயலாளரும் அதேபோன்ற பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து தான் சென்றோம். ஆனாலும், ஏதாவது குறை இருந்தால் விசாரித்து சரிசெய்யச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.