Skip to main content

மம்தாவின் '10 மணி அறிவிப்பு' - பதறிய பாஜக

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
BJP criticizes Mamata's '10 o'clock announcement'

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், குஜராத், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நிற்பதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் மம்தா பானர்ஜியிடம் தொடர்ந்து பேசி வருவதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த அரசு கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 'இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதனை அறிந்துகொள்ள எனது முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்' என தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிவிப்பில், 'ஏப்ரல், 2024 முதல், எங்கள் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியமாக  ஒவ்வொரு மாதமும் ரூ.750, மேலும், எங்களது அங்கன்வாடி உதவியாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.500 உயர்த்த முடிவு செய்துள்ளோம். எங்கள் மீது நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், எங்கள் மக்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாக இருந்தாலும், அரசியல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்த கட்சியினருக்கு இது ஏமாற்றத்தையே தந்துள்ளது என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது இன்று மேற்குவங்கத்தில் நடைபெறும் நலத்திட்ட விழாக்களில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் அதனை திசைதிருப்ப மம்தா மேற்கொண்ட நூதன யுக்தி என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்