அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார்.
ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவியான ரினிகி பூயன் சர்மா அங்கம் வகிக்கும் நிறுவனம், மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தில் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ் கோகாய் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஹிமந்த பிஸ்வா, “நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு எதிராகப் பேச சட்டசபைக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல முடிவு செய்தாலும், அந்த முடிவை நான் எடுப்பேன். இதுகுறித்து நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை என் கருத்தை என்னால் நிரூபிக்க முடியும்.” என்று தெரிவித்திருந்தார். இப்படியாக இரு தலைவர்களுக்கு இடையே கடுமையான உரையாடல் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிமந்த பிஸ்வா, “ காங்கிரஸ் புதிய கூட்டணியை அமைத்து அதற்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளது.
இந்தியா என்று பெயர் வைத்துவிட்டதால் நாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். நான் இப்போது மகாத்மா காந்தி என்று பெயர் வைத்துவிட்டேன் என்றால், நான் மகாத்மா காந்தி ஆகிவிடுவேனா?. இந்த கூட்டணி உருவான பிறகு இந்தியா முழுவதும் சனாதன தர்மத்திற்கு எதிரான சூழல் உருவாகியுள்ளது. சனாதன தர்மம் குறித்து பேசியது, தி.மு.க. வின் பேச்சு சுதந்திரம் என்று காங்கிரஸ் கூறுகிறது. நான் ராகுல் காந்தியிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் திமுகவில் இல்லையென்றால் அவர்களை கூட்டணியில் இருந்து அகற்றுங்கள்” என்று கூறினார்.