பீகார் மாநிலம் பாட்னாவுக்கு அருகே உள்ளது சசாராம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் மொராதாபாத் பகுதிக்குச் செல்லும் வழியில் ஒரு பாலம் இருக்கிறது. அந்த இடத்தில எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை நேரத்தில், அந்த பாலத்தின் அடியில் உள்ள கால்வாயில், திடீரென சில மூட்டைகள் தண்ணீரில் மூழ்கியபடி வந்துள்ளது.
அப்போது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிலர், சாக்கடையில் வந்துகொண்டிருந்த மூட்டைகளை தூரத்தில் இருந்து பார்த்துள்ளனர். இதையடுத்து, அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக, அருகில் நின்று பார்த்தபோது அதில் இருப்பது அனைத்தும் ரூபாய் நோட்டுகள் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த கால்வாயில் ரவுண்டு கட்டியுள்ளனர். அதே சமயம், பாலத்துக்கு அடியில் பணம் இருப்பதை அறிந்துகொண்ட உள்ளூர்வாசிகள், அப்பகுதியில் குவியத் தொடங்கினர்.
அதன்பிறகு, அந்த சாக்கடையில் மிதப்பது ரூபாய் நோட்டுகள் தான் என்பதை உறுதி செய்த பொதுமக்கள், அந்த நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் திடீரென சாக்கடைக்குள் இறங்கி, அந்த மூட்டையில் இருந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக வெறித்தனமாக போட்டியிட்டுள்ளனர். இதையடுத்து, சாக்கடைக்குள் இறங்கியவர்கள் அதிலிருந்த 500 ரூபாய், 100 ரூபாய் தாள்களை அள்ளிச் சென்றனர். அதுமட்டுமின்றி, பணத்துடனும் நாற்றத்துடனும் வெளியே வந்த பொதுமக்கள், ஈரமாக இருந்த ரூபாய் நோட்டுகளை, கருவாடு காய வைப்பது போல் தங்களது வீட்டு வாசலில் காய வைத்துள்ளனர்.
அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், பொதுமக்கள் சாக்கடையில் இறங்கி ரூபாய் நோட்டுகளை அள்ளிச் செல்வதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ வைரலானதை அடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், சில உள்ளூர்வாசிகள் அந்த நோட்டுகள் அனைத்தும் உண்மையானவை என்று கூறினாலும், மற்றவர்கள் அவை போலியானவை எனக் கூறி வருகின்றனர்.