பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் உ.பி. நெடுஞ்சாலை ஒன்றில் நடைப்பயணமாகச் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த போது முசாஃபர் நகர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப்பயணமாகவே பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. அண்மையில் கூட மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடைப்பயணம் மேற்கொண்ட போது ரயில் மோதி அந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அதேபோல நேற்றிரவு பீகார் மாநிலத்தின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 9 தொழிலாளர்கள் உ.பி. நெடுஞ்சாலை ஒன்றின் வழியாக நடைப்பயணமாகத் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது முசாஃபர் நகரின் ஷகாரான்பூர் நெடுஞ்சாலையில் உள்ள காலாலி சோதனைச் சாவடி அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக அங்கு வந்த பேருந்து ஒன்று, தொழிலாளர்கள் மீது மோதியுள்ளது. இதில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முசாஃபர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.