இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில், இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா, தற்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், கரோனா உறுதியாகும் சதவீதம் 10 அல்லது அதற்கு மேல் இருக்கும் மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் தற்போது, சராசரியாக நான்கில் மூன்று மாவட்டங்களில், கரோனா உறுதியாகும் சதவீதம் 10 க்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர், "கரோனா உறுதியாகும் சதவீதம் அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு தொடர வேண்டும். கரோனா உறுதியாகும் சதவீதம் 10லிருந்து 5 ஆக குறைந்தால் அங்கு ஊரடங்கை விலக்கிக்கொள்ளலாம். ஆனால் அது அடுத்துவரும் 6 முதல் 8 வாரங்களில் நடக்காது" எனக் கூறியுள்ளார்.
மேலும், டெல்லியில் கரோனா உறுதியாகும் சதவீதம் 35 ஆக உயர்ந்திருந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக அது 17 சதவீதமாகக் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய பல்ராம் பார்கவா, நாளையே டெல்லியில் ஊரடங்கை நீக்கினால் அது பேரழிவாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.