பீகார் மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளன. அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (BJP-JD(U)-HAM-VIP) 6 சதவீத வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதில் 38 சதவீதம் பேர் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாகவும், 32 சதவீதம் பேர் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மெகா கூட்டணிக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் ஆட்சிக்கு வரவேண்டும் என 6 சதவீத மக்கள் விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணி 133 முதல் 143 இடங்களில் வெற்றிபெறலாம் எனவும், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மெகா கூட்டணி 88 முதல் 98 இடங்களைப் பெறலாம் என்றும் தெரியவந்துள்ளது.