17- வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால மக்களவை சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஓம்.பிர்லா மக்களவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார். பின்பு 2019-2020 ஆம் ஆண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மாநில சட்டமன்ற தேர்தல்களும், மக்களவை தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே எடுத்துள்ள நிலையில் அதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணத்தை பெருமளவில் மிச்சப்படுத்தலாம். இது குறித்து விரிவாக அரசியல் கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பின்பு அரசியல் கட்சிகள் ஒப்புதல் தரும் பட்சத்தில் இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொண்டு நடைமுறைபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த கூட்டத்தில், 2022- ஆம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பற்றியும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.