இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் பெய்த கனமழையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தர்மசாலாவிலிருந்து 58 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்க்ரா மாவட்டத்தில் பெய்த கனமழையாலும், வெள்ளப்பெருக்காலும் அந்த பகுதியிலுள்ள கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. காங்க்ரா மாவட்டம் என்பது அம்மாநிலத்தின் மிகமுக்கிய சுற்றுலா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், காங்க்ரா மாவட்டத்தில் இரண்டு பேர் கனமழை மற்றும் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான பாக்சு நாக்கிலும் மழை மற்றும் வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்விரண்டு இடங்கள் மட்டுமின்றி இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இமாச்சல பிரதேச முதல்வருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அமித்ஷா, "தேசிய பேரிடர் மீட்புப் படைகள் விரைவில் நிவாரண பணிகளுக்காக அங்கு (இமாச்சல பிரதேசத்திற்கு) சென்றடையும். நிலைமையை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.