பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "7.29 கோடி மக்கள் தொகை கொண்ட பீகார் மாநிலத்தில் 3.84 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 243 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 243 தொகுதிகளில் எஸ்.சி. பிரிவினருக்கு 38 இடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கான நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெறும். 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் வீடு, வீடாக வாக்கு சேகரிக்க செல்லும்போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும். அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆம் தேதிகளில் மூன்று கட்டமாக பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 94 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக 78 தொகுதிக்கும் என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். நவம்பர் 10- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்." இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.