புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி (92) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை அன்று காலமானார். அதையடுத்து புதுச்சேரி காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மன்னர் மன்னனின் உடலுக்கு மகன்களான கவிஞர்கள் செல்வம், தென்னவன், பாரதி, மகள் அமுதவள்ளி மற்றும் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். மன்னர் மன்னனின் இறுதி விருப்பத்தின் படி, அவரது உடல் பாரதிதாசன் அரசு அருங்காட்சியமாக உள்ள பூர்வீக வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு புதுச்சேரி அரசு சார்பில் முதலமைச்சர் வே.நாராயணசாமி, சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சுந்தரேசன், இயக்குனர் ராஜ், துணை இயக்குனர் குமார், கலை பண்பாட்டு துறை இயக்குனர் ராகினி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி. துரை.ரவிக்குமார், புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணன், புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ, வெங்கடேசன் எம்.எல்.ஏ, எஸ்.பி.சிவக்குமார், மாநில எம்.எல்.ஏக்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் என்.எஸ்.ஜே.ஜெயபால், புதுச்சேரி மாநில அ.தி.மு.க. சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன், எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், புதுவைத் தமிழ்ச்சங்க தலைவர் வி.முத்து மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் நேற்று (07/07/2020) மாலை மன்னர் மன்னரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைத்திகுப்பத்தில் உள்ள பாப்பம்மாள் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே மறைந்த மன்னர்மன்னன் மறைவுக்கு கடலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அண்ணா பாலம் அருகே மன்னர் மன்னரின் உருவப்படம் அமைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் அனைத்து பொது நலக் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்புராயன், வழக்கறிஞர் திருமார்பன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரவை தர்மராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம் சார்பில் கடலூர் பேருந்து நிலையம் அருகே இரங்கல் கூட்டம் நடைபெற்றது. சங்க துணைத் தலைவர் ஜானகிராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பால்கி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று மன்னன் மன்னன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் மன்ற அலுவலகத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வானவில் மூர்த்தி அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். உலகத் திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன் மன்னர்மன்னன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கவிஞர்கள் தில்லை ராஜ், துர்காசெந்தில், மாலதி ஆகியோர் கவிதை வாசித்து அஞ்சலி செலுத்தினர். தொலைத்தொடர்புத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் இளங்கோவன் பங்கேற்று மன்னர்மன்னனின் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பணிகளைக் குறித்து நினைவேந்தல் உரையாற்றினார்.