பற்றியெரிந்த சுதந்திரப் போராட்டத்தில், அணையாத தீக்கனலைத் தனது கவிதையால் ஏற்றி வைத்தவர் மகாகவி பாரதியார். தூத்துக்குடி, எட்டயபுரத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி 1882-ஆம் வருடம் பிறந்த, அந்த 'அக்கினிக் குஞ்சு' இறுதிவரை, பயணித்த இடமெல்லாம் தமிழையும், சுதந்திரத்தையும் ஒருசேர இறுகிப் பற்றிப் பிடித்தே பறந்தது.
மீசை கவிஞனான பாரதியின் 139 -ஆவது பிறந்தநாள் இன்று. தமிழகம் மட்டுமல்லாது உலகின் பலஇடங்களில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அவரது போற்றத்தகு பெருமைகள் நினைவுகூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் சிலையிலிருக்கும் கைத்தடி காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டெல்லி மாநகராட்சி சிலையைச் சரியாகப் பராமரிக்காததே காரணம் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.
டெல்லி சுப்ரமணிய பாரதி மார்கில் உள்ள பாரதியாரின் சிலை 1987-ஆம் அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியால் திறந்துவைக்கப்பட்டது. அன்றுமுதல் டெல்லி மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது பாரதியின் சிலை. இந்நிலையில், இன்று பாரதியாரின் பிறந்த நாள் என்பதால், அவரது சிலைக்கு மாலை அணிவிக்க, அரசியல் தலைவர்கள் வந்தபொழுது, பாரதியாரின் சிலையில் இருந்த கைத்தடி காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காணாமல் போன கைத்தடியை உடனே நிறுவவேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லி துணை முதல்வருக்குக் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார். அதேபோல், காணாமல்போன பாரதியின் கைத்தடியை எடுத்துச் சென்றது யார்? என டெல்லி போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.