தாய்லாந்திற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார்.
''சவாஸ்த்தி பிஎம் மோடி'' என்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் 550 வது பிறந்த தினத்தை ஒட்டி நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். அதனை அடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களை நோக்கி பேசிய மோடி ''வணக்கம்'' என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
இந்தியா தாய்லாந்து இடையே நிலவும் நட்புறவை கண்டு தான் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் அடைவதாக அவர் குறிப்பிட்டார். தாய்லாந்தில் இருப்பது எனது சொந்த வீட்டில் நான் இருப்பதைப் போன்ற உணர்வை தருகிறது. இந்தியாவுடன் தாய்லாந்து அரச குடும்பத்தினருக்கு இருக்கும் உறவு இரு நாடுகளுக்கு இடையே உள்ள வரலாற்று ரீதியிலான உறவுகளை வெளிப்படுத்துகிறது. மொழியின் அடிப்படையில் மட்டுமல்லாமல் உணர்வுகள் அடிப்படையிலும் இருநாடுகளும் இடையே ஒற்றுமை இருக்கிறது.