வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் இந்து மத அமைப்புகள் "மாட்டுக்கறி" என்கிற வன்முறை அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது தேச ஒற்றுமைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளாக மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
மாட்டுக்கறி சாப்பிடுவதில் தவறு இல்லை என ஒரே ஒரு கருத்து மட்டும் சொன்னால் போதும் அந்த கருத்தை கூறியவர்களை தேடி கண்டுபிடித்து கொடூரமாக தாக்குவது வாடிக்கையாகிவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சமூக நல செயல்பாட்டாளர் சுவாமி அக்கினிவேஷ். இன்று இவரை ஜார்கண்ட் அருகே பகூர் என்ற இடத்தில் வைத்து பா.ஜ.க.மற்றும் ஏ.பி.வி.பி. என்கிற இந்து மத அமைப்பினர் மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர் ஒரு பொது நிகழ்வில் "மனிதர்களுக்கு உணவுப் பழக்கம் என்பது யாரும் கற்றுக் கொடுப்பதல்ல அல்லது இதுதான் உணவு என்று யாரும் தீர்மானிப்பதல்ல.. இறைச்சி சாப்பிடுவது மனித சமூகம் தோன்றியதிலிருந்து இருக்கிறது. அதே போல் தங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சாப்பிடலாம். அந்த வகையில் மாட்டுக்கறியை பிடித்த உணவாக சாப்பிடுபவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.." இப்படித்தான் பேசியிருக்கிறார். இதற்காகத்தான் மத தீவிரவாதிகள் பகூர் என்ற கிராமத்தில் வைத்து நூற்றுக்கணக்கானோர் கண்மூடித்தனமாக மிக கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமுற்ற சுவாமி அக்கினிவேஷ் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதே ஜார்கன்ட் மாநிலத்தில் தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அன்சாரி என்பவரை மதவாத கும்பல் கொலை வெறியுடன் தாக்கி அவரை அடித்தே கொன்றது. இது நடந்து ஒரு வருடம் ஆகிறது. இக்கொலை செயலில் ஈடுபட்ட கொலையாளிகள் 7 பேர் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தனர். அந்த 7 கொலையாளிகளை வரவேற்று மாலையணிவித்து வாழ்த்து தெரிவித்தார் ஜார்கண்ட்டில் உள்ள மத்திய பா.ஜ.க.அமைச்சர் ஒருவர். மனிதர்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் எந்த மதமும் நுழைய இடமில்லையென்றும் மாட்டு கறி விஷயத்தில் சட்டத்திற்கு புறம்பாக யாரும் வன்முறையை கையிலெடுக்க கூடாது அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் இன்று மாட்டுக்கறி சாப்பிடுவது தவறில்லை என கூறியதற்காக சமூக செயல்பாட்டாளர் சுவாமி அக்கினிவேஷ் கடுமையாக மதவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார். என்பது சட்டமும், நீதியும் எங்களிடம் தான் என்கிற சர்வாதிகார குனத்தையே பிரதிபலித்துள்ளது.