தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தனி நபர் ரகசியங்களைக் காப்பது என்பது, அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது, தனிநபர் ரகசிய காப்புக்கு எதிரானது என்று பல்வேறு மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. இதனைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், தனிநபர் ரகசியம் என்பதை மக்களின் அடிப்படை உரிமையா என விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின்போது, தனிநபர் ரகசியங்களை காப்பது என்பது அனைவருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை என அறுதியிட்டுக் கூற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. சில நேரங்களில் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பகிரங்கமாக வெளியிடாமல் தவிர்க்கலாமே தவிர, அத்தகைய விவரங்களை எதற்காகவும் திரட்டவே கூடாது என்று வாதிடுவது ஏற்புடையதல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மூன்று வாரங்கள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை, கடந்த 2ம் தேதி நிறைவுபெற்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது.
இந்நிலையில் இந்த வழக்கில், தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.