“நீதிமன்றம்.. பல விசித்திர வழக்குகளைச் சந்தித்திருக்கிறது” என்று பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அது வெறும் வசனம் மட்டும் கிடையாது. உண்மையிலேயே நீதிமன்றங்கள் பல்வேறு விசித்திரமான வழக்குகளை தினந்தோறும் சந்திக்கின்றன. அவற்றில் பலவற்றுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, சமீபத்தில் கொடுக்கப்பட்ட சபரிமலையில் பெண்கள் போன்ற தீர்ப்புகள் அதிக கவனம் பெற்றன. பொதுநலன் சார்பிலான வழக்குகள்தான் இதுபோன்ற தீர்ப்புகளுக்கும் அடித்தளமாக இருந்திருக்கின்றன. அதேசமயம், சில விநோத, வேடிக்கையான பொதுநல வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதுண்டு. அவற்றைக் கண்டிப்பதோடு, மனு கொடுத்தவருக்கு நீதிமன்ற நேரத்தை வீணடித்து விட்டதற்காக அபராதம் விதிப்பது வழக்கம். ஒருநாளைக்கு நான்கு பொதுநல வழக்குகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவதால், இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அப்படியொரு வழக்குதான் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.
இந்தியா முழுவதிலும் சிவப்பு நிற உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதுதான் அந்த மனுவின் கோரிக்கை. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விவரங்களைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி, “கேலிக்கூத்தான பொதுநல வழக்கு” என கிண்டல் செய்து, வழக்கையும் தள்ளுபடி செய்தார். ஆனால், இந்த வழக்கு தொடர்ந்தவருக்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.