Skip to main content

காங்கிரஸ் அலுவலகத்தில் மொட்டையடித்துக்கொண்ட மகளிரணி தலைவி!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

LATIKA SUBASH

 

கேரளாவில் சட்டமன்றத் தோ்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி கேரள தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை அறிவித்துள்ளன. ஓவ்வொரு கட்சியிலும் சீட் கிடைக்காதவா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா்.

 

கேரளாவில் காங்கிரஸ் கட்சி 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் முதற்கட்டமாக 86 வேட்பாளா்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (14 மார்ச்) காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் கோட்டயத்தைச் சோ்ந்த மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி லதிகா சுபாஷின் பெயா் வேட்பாளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், தனது ஆதரவாளா்களுடன் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்து மொட்டையடித்து தனது எதிா்ப்பைக் காட்டினாா். 

 

இதுகுறித்து லதிகா சுபாஷ் கூறும்போது, "நான் 30 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறேன். ஏற்கனவே கோட்டயம் மாவட்ட பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளேன். தொடா்ந்து ஒவ்வொரு தோ்தலிலும் போட்டியிட சீட் கேட்டு வந்தேன். ஆனால் என்னை கட்சி தலைமை ஏமாற்றியே வந்தது. தற்போது 2021 தோ்தலில் கோட்டயம் ஏற்றமானூா் தொகுதியைக் கேட்டேன். அதை கூட்டணிக் கட்சியான கேரளா காங்கிரஸ் ஜோசப் அணிக்கு ஒதுக்குவதாக கூறினாா்கள். அதனால் எா்ணாகுளம் வைப்பின் தொகுதியைக் கேட்டேன். அதை தருவதாக கட்சி தலைமை கூறியது. இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளா்கள் பட்டியலில் எனது பெயா் இல்லை. நான் கேட்ட தொகுதியிலும் வேறு ஒருவருக்கு சீட் கொடுத்திருக்கிறாா்கள். இதனால் காங்கிரஸ் தலைமை என்னை ஏமாற்றி சதி செய்துவிட்டது. மேலும் காங்கிரசில் 9 பெண்களுக்கு மட்டும்தான் சீட் கொடுத்திருக்கிறாா்கள். எனவே என்னுடைய எதிா்ப்பைக் காட்டும் விதமாகத்தான் தலை முடியை மொட்டையடித்துள்ளேன்" என்றார்.

 

மேலும் அவர், மாநில காங்கிரஸ் தலைமையைக் கண்டித்து ஒரு பக்கம் மொட்டையடித்துக் கொண்டதாகவும், இன்னொரு பக்கம் பெண்களுக்கு விரோதமாக செயல்படும் மோடி, உ.பி முதல்வா் யோகி மற்றும் கேரளா முதல்வா் பினராயி விஜயனை கண்டித்து மொட்டை போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி, கட்சி அலுவலகத்திலேயே மொட்டையடித்த சம்பவம் கேரள காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்