சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லி முழுவதும் பதட்டமான சூழலை சந்தித்தன. இந்நிலையில் இதுகுறித்த மேகாலயா ஆளுநரின் கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் ஏற்பட்ட கலவரங்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மேகாலயா ஆளுநர் தத்தகதா ராய், "பீஜிங், தியானன்மென் சதுக்கம் நினைவு இருக்கிறதா? அதை டெங் ஜியோபிங் எப்படி கையாண்டார்? வடகிழக்கு டெல்லியில் தூண்டி விடப்பட்ட கலவரத்தை எப்படி ஒடுக்குவது என்பதை தியான்மென் சதுக்க நிகழ்வில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை எல்லா காம்ரேடுகளும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.
கடந்த 1989-ம் ஆண்டு, சீனாவில் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில், சீனாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக பல வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது போராட்டத்தை கலைப்பதற்காக சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலியானதுடன், போராட்டமும் முடிவுக்கு வந்தது. இதனை டெல்லியுடன் ஒப்பிட்டு அவர் பதிவு செய்த ட்விட்டர் கருத்து சர்ச்சையானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் தனது பதிவை நீக்கியுள்ளார்.