தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடும் மக்களவை தொகுதியான நிஜாமாபாத் தொகுதியில் இந்த முறை மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் இல்லாமல் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளது.
நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் விளைபொருட்களுக்கும், மஞ்சளுக்கும் உரிய விலை கோரியும், மஞ்சள் வாரியம் அமைக்கக் கோரியும் விவசாயிகள் பல காலமாக கேட்டு வருகின்றனர். கடந்த தேர்தலின் போது அவர்களை கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி கவிதா உறுதியளித்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தினார்கள்.
அதற்குப் பலன் இல்லாததால், தொகுதி மக்களிடம் பணம் திரட்டி கவிதாவை எதிர்த்து அவரது தொகுதியில் 170 விவசாயிகள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 64 வேட்பாளர்களின் பெயர் வரை மட்டுமே மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், அந்த தொகுதியில் மட்டும் மொத்தம் 185 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தேர்தல் ஆணையம் இந்த தொகுதியில் மட்டும் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.