உலகின் மிகவேக மனிதர் என பெயர்பெற்ற உசைன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஸ்ரீனிவாசகவுடா பயிற்சியளிப்பதற்கான உதவிகள் செய்யப்படும் என மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெறும் கம்பாளா ஓட்டப்பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் அந்த இளைஞர் கடந்துள்ளார். தனது மாடுகள் சேற்றில் ஓடும்போது, அதன் கயிறுகளை பிடித்தபடி, அதன் பின் அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்களும் ஓட வேண்டும். அந்த சேறு நிறைந்த பாதையில் ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.
இந்த கணக்கின்படி 100 மீட்டர் தூரத்தை கடக்க அவர் வெறும் 9.55 வினாடிகளே எடுத்துக்கொண்டுள்ளார். உசைன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனை 9.58 வினாடிகள் ஆகும். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவிய சூழலில், இது போன்ற வீரர்களை அரசு சரியாக அடையாளம் கண்டு முறையான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிறைய பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதே கருத்தை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த பயிற்சியாளர்கள் மூலம் ஸ்ரீநிவாஸ் கவுடாவுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படும். ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தின் தன்மை, தரம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் திறமையான ஒருவரும் வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்பது உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.