மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங், சமீபத்தில், போதைப் பொருட்களைப் பயிரிடுவதற்கு எதிராகப் பழங்குடியின மக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி குறித்த வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், "இன்று வரலாறு படைக்கப்பட்டது. இன்று இம்பாலில் நடைபெற்ற பொதுமாநாட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்துச் சமூகங்களும், பழங்குடியினரும் போதைப்பொருள் மற்றும் போதைச் செடி தோட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்தார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் முதல்வர் பிரேன் சிங் பெயரில் உள்ள, பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகியது. வெரிஃபைடு செய்யப்படாத இந்தப் பக்கத்தில் வெளியான புகைப்படத்தில், பிரேன் சிங் நடந்து வருகையில் பள்ளி மாணவர்கள் இருபுறமும் மண்டியிட்டு வழங்கும் காட்சியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த இணையவாசிகள், மாணவர்கள் மண்டியிட்டு வணங்குவது முதல்வரின் சர்வாதிகார மனநிலையைக் காட்டுகிறது என விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம் சிலர், இவ்வாறு வரவேற்பளிப்பது மணிப்பூரின் கலாச்சாரம் என்று தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்தப் புகைப்படம் குறித்து, மணிப்பூர் அரசோ, பிரேன் சிங்கோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.