புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்திய வான்படை பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது பற்றி இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பால்கோட் பகுதியின் செயற்கைகோள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய வான் படை தற்போது தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், "80 சதவிகித குண்டுகள் சரியாக இலக்கை தாக்கியுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை மிகவும் துல்லியமான 12 சேட்டிலைட் புகைப்படங்களை அரசிடம் ஆவணங்களுடன் சமர்பித்துள்ளது. இந்திய விமானப்படை வீசிய குண்டுகளில் 80 சதவீதம் இலக்கை துல்லியமாக தாக்கி, கட்டிடத்தின் மேற்பகுதியை துளைத்து உள்ளே புகுந்து வெடித்தது, சேதத்தை ஏற்படுத்தியது" என கூறியுள்ளது.