அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை, சமூக ஊடகமான ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிரான அபாயகரமான அமைப்பென ஃபேஸ்புக்-ன் பாதுகாப்புக் குழுவால் சான்றளிக்கப்பட்ட நிலையிலும், பஜ்ரங்தளின் வீடியோ ஒன்றை அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபேஸ்புக் அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
ஜூன் மாதம் நியுடெல்லியின் புறநகர்ப் பகுதியில் கிறித்துவ தேவாலயம் ஒன்றின் மீதான தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பு எனக் கூறும் காணொளிக் காட்சியொன்று ஃபேஸ்புக்-ல் பதிவிடப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் வரை ஃபேஸ்புக் குழுமம் அதை நீக்கவில்லை.
அந்தக் காணொளிக் காட்சியைத் தடைசெய்தால், இந்திய ஃபேஸ்புக் அலுவலகத்தில் பணிபுரியும் தங்களது ஊழியர்களுக்கு ஆபத்து நேரலாம்.. அதுபோல ஃபேஸ்புக்-ன் வியாபாரத்துக்கும் இடைஞ்சல்வரலாம் என்ற காரணத்தினாலேயே ஃபேஸ்புக் அதனைத் தடைசெய்யவில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் கட்டுரைக்குப் பதிலளித்த ஃபேஸ்புக்-ன் செய்தித்தொடர்பாளர் ஆன்டி ஸ்டோன், “கட்சி மற்றும் அரசியல் சார்பின்றியே உலகம் முழுவதும் ஆபத்தான தனிநபர்கள், அமைப்புகள் குறித்த எங்கள் கொள்கையைச் செயல்படுத்திவருகிறோம்” எனத் தெரிவித்தார்.