கர்நாடக மாநிலம் பெங்களூரு பையனஹள்ளி ரயில் நிலையத்தின் முக்கிய நுழைவுவாயில் ஒன்றில் நேற்று முன்தினம் பிளாஸ்டிக் பேரல் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே போலீசார் அந்த பிளாஸ்டிக் பேரலை திறந்து பார்த்தபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட ரயில்வே போலீசார் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் பிளாஸ்டிக் பேரலை அவசர அவசரமாக ரயில் நிலையத்தில் இறக்கி வைத்து விட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. மேலும் ஆட்டோவில் வந்த மர்ம நபர் பற்றிய விபரமும், பேரலில் இருந்த பெண்ணின் விபரம் பற்றியும் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவில் உள்ள எஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இதே போன்று ஒரு பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக இதே போன்று நடைபெற்று உள்ளது பெங்களூரு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.