உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆஷிஸ் மிஸ்ராவும், அவரது அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில், ஆஷிஸ் மிஸ்ராவும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்தநிலையில், அவர்களது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆஷிஸ் மிஸ்ராவின் பெயர், விசாரணை அறிக்கையில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாலும், சிறப்பு விசாரணை குழு போதுமான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளதாலும் ஆஷிஸ் மிஸ்ராவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு வழக்குரைஞர் எஸ்பி யாதவ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆஷிஸ் மிஸ்ராவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது குறித்து பேசிய மாவட்ட அரசு வழக்கறிஞர் அரவிந்த் திரிபாதியும் இதனையே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட பிறகு ஆஷிஸ் மிஸ்ரா அந்த இடத்தைவிட்டு ஓடியதாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுதி செய்துள்ளனர். தார் ஜீப்பில் டிரைவர் இருக்கைக்குப் பக்கத்தில் ஆஷிஸ் மிஸ்ரா அமர்ந்திருப்பதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில், ஆஷிஷ் மிஸ்ராவின் மொபைல் லோக்கேஷன் அவர் வன்முறை நடந்த இடத்தில் இருந்ததைக் காட்டியுள்ளது. மேலும் இந்த விசாரணையில், அவர் விவசாயிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே கரும்பு வயலை நோக்கி ஓடியதும் தெரியவந்துள்ளது. தடய அறிவியல் அறிக்கையில் அவரது துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் சுடப்பட்டது தெரியவந்துள்ளது. ஆஷிஸ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானதாக இருப்பதாலும், விசாரணை நிலுவையில் இருப்பதாலும் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.”
இவ்வாறு அரவிந்த் திரிபாதி கூறியுள்ளார்.