நேற்று மும்பையில் நடைபெற்ற 'இந்தியப் பொருளாதார கருத்தரங்கு' மாநாட்டில் பாபா ராம்தேவ் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் பாபா ராம்தேவ். அப்போது அவரிடம், 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததால், மோடியின் தலைமை மீது தொண்டர்களுக்கும், மக்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராம்தேவ், பிரதமர் மோடியின் தலைமைப் பண்பின் மீது ஒருவரும் சந்தேகப்பட முடியாது என ஆவேசமாக கூறினார். மேலும் மற்ற தலைவர்களைப் போல், வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் தலைவர் அல்ல மோடி என்று தெரிவித்தார்.
மோடியின் நிர்வாகம் குறித்து எந்த சந்தேகமும் எழுப்ப முடியாது. ஏனெனில் தேசத்தைக் கட்டமைக்கும் வகையில் 100 மிகப்பெரிய திட்டங்களை மோடி நிறைவேற்றியுள்ளார் என கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பதிலளித்த அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து பணமும் சமமாக இருக்கிறது. ஆனால், அந்தப் பணம் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது மிகப்பெரிய கேள்வியாகும். வேளாண்மை, சுகாதாரம், கல்வி போன்ற ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என கூறினார். பதஞ்சலி நிறுவனம் குறித்து பேசிய அவர், 2025 ல் உலகளவில் மிகப்பெரிய நிறுவனமாக இது இருக்கும் என கூறினார்.