சமூகவலைதளம் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமான பாபா கா தாபா உணவகம் ஜொமாட்டோவில் சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காந்தா பிரசாத் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வருகின்றனர். முதியவர்களான இவர்கள் இருவரும் வயதான காலத்திலும் இந்த கடையில் உழைத்து அதன்மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், ஊரடங்கிற்கு பின்னர் இவர்களது கடையில் வியாபாரம் குறைந்துள்ளது. சமைத்த உணவை வாங்க வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாததால், வருமானமும் ஈட்ட முடியாமல் இந்த தம்பதி தவித்து வந்துள்ளது. இந்த சூழலில், தங்களது கடையில் வியாபாரம் ஆகாதது குறித்து கண்ணீருடன் இந்த தம்பதியினர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து இந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. முன்னர்போல் அல்லாமல் தற்போது புதிய ஆர்டர்களும் குவியத் தொடங்கியுள்ளதாக மற்றொரு வீடியோவில் மகிழ்ச்சியாக தெரிவித்தார் காந்தா பிரசாத். இந்நிலையில், இந்த தம்பதிக்கு உதவும் வகையில், இந்த உணவகத்திலிருந்து உணவை ஆன்லைன் ஆர்டர் மூலம் டெலிவரி செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது ஜொமாட்டோ நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "பாபா கா தாபா இப்போது ஜொமாட்டோவில் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் எங்கள் குழுவினர் அங்குள்ள வயதான தம்பதியினருடன் இணைந்து உணவு விநியோகங்களை செய்கின்றனர். இதனை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்த நல்லவர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளது.