அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது தொடர்பான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அயோத்தி பகுதி முழுவதும் இயல்பு நிலையை இழந்து தவித்து வருகிறது.
விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு. மேலும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் தொடர்பான சுற்றறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்குடன் தொடர்புடைய அயோத்தி பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அயோத்தியில் உள்ள முக்கிய இடங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், துணை ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலானோர் வெளியூரில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதேபோல உணவு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற பயத்தில் அங்குள்ள ஆண்கள் தற்போதே உணவுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர். அதேபோல திருமணங்கள் உள்ளிட்ட விசேஷங்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.