கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர், அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்கக் கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று பெங்களூரில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆஜர் படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகில் எல்லாப் பகுதிகளிலும் தங்கத்தின் நிறம் மஞ்சளாக இருக்கும் போது கேரளாவில் மட்டும் அதன் நிறம் சிவப்பாக உள்ளது என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார். தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி அரசுக்குத் தொடர்பு இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் கேரள முதல்வருக்குத் தொடர்பு இருப்பதாகவும், முதல்வரின் தனிச் செயலாளருக்கும் ஐ.டி. அதிகாரிக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்பியுள்ள நட்டா, கேரள முதல்வர் அலுவலகம் நெருக்கடியில் இருப்பது தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெறும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் எனவும் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.