புதிய ரூ.200 நோட்டுகள் ஏ.டி.எம்-களில் கிடைப்பதில் தாமதம்!
இன்று வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த புதிய ரூ.200 நோட்டுகளை ஏ.டி.எம் இயந்திரங்களின் வழியாக பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக புதிய ரூ.200 நோட்டுகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரூ.200 நோட்டுகள் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் உள்ளது. முன்னதாக வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் இந்த புதிய நோட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இந்த புதிய நோட்டுகளின் முறையான அளவுகள் தெரியாமல், ஏ.டி.எம் எந்திரங்களில் வைக்க முடியாது எனவும், தொடர் விடுமுறை காரணமாக இந்த ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம் எந்திரங்களின் வாயிலாக விநியோகம் செய்யப்பட ஒரு வாரம் ஆகலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய ரூ.200 நோட்டுகள் ஏ.டி.எம் சேவைக்கான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் அளவுகள் கணக்கிடப்படும். பின்னர், ஏ.டி.எம் எந்திரங்களில் உள்ள பணம் வைக்கும் கேசட்டுகள் அதற்கேற்றாற்போல் வடிவமைக்கப்படும். இதற்கு ஒருவாரம் அல்லது அதற்கும் அதிகமான கால அவகாசம் தேவைப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.பி.ஐ-ன் கிளைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் வழியாக புதிய ரூ.200 நோட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவித்துள்ளது.
தற்போது வரை ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான பணத்தை வைக்கும் அளவிற்கான கேசட்டுகள் மட்டுமே ஏ.டி.எம் எந்திரங்களில் உள்ளன. இந்த கேசட்டுகளில் ஒன்றில் 2,500 ரூபாய் நோட்டுகள் வைக்கலாம் என்பது கூடுதல் தகவல்.
- ச.ப.மதிவாணன்