அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு: வனவிலங்கு சரணாலயத்தில் 140 விலங்குகள் நீரில் மூழ்கி பலி!
அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அஸ்ஸாமில் பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ளபாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கியமான தேசிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றான, அஸ்ஸாமின் காசிரங்கா பூங்காவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பூங்காவில் இருந்த 140-க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.
இந்தப்பூங்கா யுனெஸ்கோவால் பாரம்பரிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரம்மபுத்ரா நதி நிறைந்ததால், அதிலிருந்து வெளியேறிய தண்ணீர், திப்லூ நதி வழியாக பூங்காவினுள் நுழைந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த விலங்குகளில் 120-க்கும் மேற்பட்டவை மான்களாகவே உள்ளன. 7 காண்டாமிருகங்களும் இதில் இறந்துள்ளன. இவற்றை மீட்கும் பணியில் மீட்புப்படையினரும், சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்படுகின்றனர்.
பல உயிரினங்கள் பூங்காவில் இருந்து வெளியேறி, தேசிய நெடுஞ்சாலை-37 சாலையோரங்க ளில் அலைவதாகவும், வாகன ஓட்டிகள் 20-40 கிமீ வேகத்தில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்