நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அதே வேளையில், காங்கிரஸ் கட்சியில் இருந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும், கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.கவில் இணைந்த அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
அதேபோல், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த விஜயதாரணி, தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். இது பெரும் விவாதப் பொருளாக மாறி வந்தது. அதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கீதா கோடா, நேற்று முன்தினம் (26-02-24) காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில், மாநிலங்களவைத் தேர்தல் நேற்று (27-02-24) நடைபெற்றது. இதில், இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தனர். இதனால், பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதே வேளையில், அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட சலசலப்புகள் ஓய்வதற்கு முன்னரே, அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது.
அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஜோர்ஹாட் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராணா கோஸ்வாமி, இன்று (28-02-24) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை அவர், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் அளித்தார். இதனைத் தொடர்ந்து ராணா கோஸ்வாமி டெல்லிக்கு சென்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பா.ஜ.க.வில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.