காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை நடத்தப் போவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மணிப்பூர் மாநிலத்திலிருந்து துவங்கும் இந்த நியாய யாத்திரைக்கான துண்டு பிரசுரங்கள் மற்றும் வலைத்தளத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களான ஜெய்ராம் ரமேஷ் மற்றும் கே.சி. வேணுகோபால் நேற்று (10-10-24) துவக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு அனுமதி இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில அரசு தெரிவித்ததாகக் கூறப்பட்டது. மேலும், மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக இரு சமூகத்தினரிடையே கலவரம் நீடித்து வருவதால், பிரச்சனை வர வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ராகுல் காந்தியின் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, யாத்திரைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாது என்று கூறியதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், நேற்று இரவு (10-01-24) இம்பால் மாவட்ட ஆட்சியர், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். ஆட்சியர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவில், ‘எந்தவொரு அசம்பாவித சம்பவமும், சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுவதை தடுக்க, குறைந்த அளவிலான பங்கேற்பாளர்களுடன் யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்படுகிறது.
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர், செல்போன் எண் ஆகிய விபரங்களை முன்கூட்டியே தர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. இம்பாலில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், யாத்திரைக்கு அதிகம் பேர் கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி அறிக்கை தந்ததன் மூலம் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.