வறுமையின் காரணமாக, பெற்றோர் வேலைக்கு செல்வதால், ஒன்றரை வயது சகோதரியை மடியில் வைத்தப்படி, பள்ளியில் படித்து வந்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்க உள்ளது.
மணிப்பூர் மாநிலம், இம்பால் அருகே உள்ள கிராமத்து பள்ளியில் 10 வயதாகும் பாமே என்ற சிறுமி, வகுப்பறையில் தனது ஒன்றரை வயது சகோதரியை வைத்துக் கொண்டு பாடங்களைக் கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பெற்றோர் வேலைக்கு செல்வதால், சகோதரியைக் கவனிக்க ஆளில்லாமல், அந்த குழந்தையை தன்னுடன் பள்ளிக்கு அழைத்துச் சென்று, மடியில் தூங்கவைத்தப்படி, பாடங்களைக் கவனித்துள்ளார்.
இந்த புகைப்படங்களைப் பார்த்த பலரும், அவருக்கு உதவி செய்யுமாறு சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், மணிப்பூர் அமைச்சர், அந்த சிறுமியைச் சந்தித்து அவரின் கல்வி மீதான ஆர்வத்தைப் பாராட்டியுள்ளார். பின்னர், அந்த சிறுமியின் கல்வி செலவை அரசே ஏற்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் மணிப்பூர் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.