நாடு முழுவதும் 5 கட்ட மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து டெல்லியில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு டெல்லியில் பாஜக சார்பில் கவுதம் கம்பீரும், ஆம் ஆத்மி சார்பில் அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளரான அதிஷியும் போட்டியிடுகிறார். கவுதம் கம்பீர் 2 வாக்காளர் அட்டை வைத்திருப்பதாக அதிஷி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் அதிஷி பற்றி மோசமாக விமர்சித்து துண்டு பிரசுரம் டெல்லி கிழக்கு பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்ட அதிஷி இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கண்ணீர் விட்டு அழுதார். இது குறித்து கருத்து கூறியுள்ள அவர், " எவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்பதை இதன் மூலம் அவர்கள் காட்டியுள்ளனர். மோசமான இந்த வாசகத்தை படிக்கும் யாராக இருந்தாலும் அவமானம் கொள்வார்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பா.ஜனதா வேட்பாளர் கவுதம் கம்பீர் வெளியிட்ட துண்டுச்சீட்டை வாசித்து பாருங்கள்" என கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது டெல்லி அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆனால் கம்பீர் தன மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் இதனை நிரூபித்தால் வேட்புமனுவை கூட வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.