அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால், ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்று இதுவரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்றும் (31-08-23), நாளையும் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் இரண்டு கட்சிகள் இணையப் போவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், ஒரு தனியார் செய்தி நிறுவனத்தை சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், இந்தியா கூட்டணியின் சார்பாக பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும்? என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர், “ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் என்ற முறையில் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும். அவர் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். இந்தியாவின் அடுத்த பிரதமராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். அவர் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை எழுப்பி வருகிறார். மக்களுக்கு சாதகமான, லாபகரமான முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
டெல்லி தலைநகரில் குறைந்த பணவீக்கத்திற்கு வழிவகுத்து வருகிறார். ஒட்டுமொத்த நாடும் பலன் அடையக்கூடிய மாடலை அளித்துள்ளார். எனவே, அவர் பிரதமராக வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆனால், முடிவு என் கையில் இல்லை. எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயமாக கலந்து கொள்வார்” என்று கூறினார்.
இந்த செய்தி பரவிய சில மணி நேரத்திலேயே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டெல்லி அரசின் முக்கிய அமைச்சர் அடிஷி, “பிரதமர் பதவிக்கு அரவிந்த கெஜ்ரிவால் போட்டியிடவில்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறுகிறேன். செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியது அவருடைய சொந்த கருத்து ஆகும்” என்று கூறினார்.