நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் இன்று (18/09/2021) மாலை பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாரதியாரின் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, "நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை மீண்டும் பதிய வைத்தவர் பாரதியார். தனது பாடல்கள் மூலம் நாட்டுப்பற்றைத் தொடர்ந்து விதைத்தவர் பாரதியார். பாரதியாரின் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்தில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்தது" என்றார்.
அதைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி கவிஞர், பத்திரிகையாளர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவாரக திகழ்ந்து, ஏழைகள் மற்றும் பின்தங்கியோரை ஆழ்ந்து நேசித்தார்.
அவரது உணர்ச்சிமிகு கவிதைகள் மற்றும் எழுத்துகள் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றின. இந்திய அரசு அவருக்கு வழங்கிய ‘தேசிய கவி’ எனும் பட்டம் மிகவும் பொருத்தமானது.
‘நல்ல காலம் வருகுது’ என்று மகாகவி பாரதி கூறுவார். இந்த உணர்வோடு நாம் முன்னேறுவோம். நமது இளைஞர்கள் அவர்களது அளப்பரிய சக்தி மற்றும் உற்சாகத்துடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு உரமூட்டி வேகப்படுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.