டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். மேலும் இது தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அதே சமயம் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, பாஜகவிற்கும் ஆம் ஆத்மிக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிகழ்வதால், அரசியல் பழிவாங்கலுக்காக இதுபோன்ற சம்பவங்களில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், “டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 7 பேரை பாஜக தொடர்பு கொண்டு அவர்களுக்கு ரூ. 25 கோடி வரை தருகிறோம்; தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு தருகிறோம் என்று கூறி தங்கள் பக்கம் வருமாறு பேரம் நடத்தியுள்ளது” என்றார். தொடர்ந்து, “மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவாலை விரைவில் கைது செய்துவிடுவோம்; பின்னர் தன் பக்கம் எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை கவிழ்த்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த 7 எம்.எல்.ஏக்களும் அதனை புறக்கணித்துள்ளனர்” என்றார்.