ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபட, தனக்குச் செய்த கைமாறுகள் குறித்து பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விசாரணையில் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள வாட்சப் உரையாடல் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர்.பி. முறைகேடு வழக்கில் அர்னாப் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளிவந்த நிலையில், பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடனான அவரது இந்த உரையாடல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பார்தோ தாஸ்குப்தா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 3,600 பக்க துணை குற்றப்பத்திரிக்கையை ஜனவரி 11 அன்று மும்பை காவல்துறை பதிவு செய்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, பார்தோ தாஸ்குப்தா மும்பை காவல்துறைக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு சுமார் 12, 000 டாலர் பணமும், அதுதவிர டி.ஆர்.பி தகவல்களை மாற்றியமைப்பதற்காக 40 லட்ச ரூபாயும் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரின் வாக்குமூலத்தில், "அர்னாப் கோஸ்வாமியை எனக்கு 2004 முதல் தெரியும். ‘டைம்ஸ் நவ்’ சேனலில் நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். நான் 2013-ல் பார்க் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தேன். அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக் டிவியை தொடங்கினார். ரிபப்ளிக் டிவியை தொடங்குவதற்கு முன்பே அவர் என்னுடன் அதுகுறித்த திட்டங்களைப் பற்றிப் பேசுவார். மேலும் அவரது சேனலுக்கு நல்ல மதிப்பீடுகளைப் பெற அவருக்கு உதவ வேண்டும் என்பதையும் மறைமுகமாகக் கூறுவார். டிஆர்பி அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பது எனக்குத் தெரியும் என்று கோஸ்வாமிக்கு நன்றாகவே தெரியும். எதிர்காலத்தில் எனக்கு உதவுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு நம்பர் 1 மதிப்பீட்டை உறுதிசெய்ய எனது குழுவுடன் இணைந்து பணியாற்றினேன். இது 2017 முதல் 2019 வரை நடந்தது. இதற்காக, 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி, லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்து, நான் எனது குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து சுற்றுலா செல்வதற்காக 6000 டாலர் பணத்தைக் கொடுத்தார். அதேபோல, 2019 ஆம் ஆண்டு அதே இடத்தில் மீண்டும் என்னைச் சந்தித்த அவர், ஸ்வீடன் மற்றும் டென்மார்க் குடும்ப சுற்றுலாவிற்கு 6000 டாலர்களை எனக்குக் கொடுத்தார்.
மேலும் 2017 ஆம் ஆண்டில், கோஸ்வாமி என்னைத் தனிப்பட்ட முறையில் ஐடிசி பரேல் ஹோட்டலில் சந்தித்து ரூ .20 லட்சம் ரொக்கத்தைக் கொடுத்தார். அதேபோல, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கோஸ்வாமி என்னை ஐடிசி ஹோட்டல் பரேலில் சந்தித்து ஒவ்வொரு முறையும் ரூ.10 லட்சம் கொடுத்தார்" எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.