அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த வாரம் அதிதீவிரப் புயலாக வலுவடைந்தது. இதன் காரணமாக கட்ச் மாவட்ட கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்தனர். வானிலை ஆய்வு மையம், பிபர்ஜாய் புயல் 15 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவித்திருந்தது. இதனால் நேற்று காலை முதல் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 75 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் அருகே கடக்கத் தொடங்கியது. அப்போது பலத்த மழையும் பெய்து வந்தது. இதையடுத்து மாலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது சுமார் 140 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. குஜராத்தில் கரையைக் கடந்த பிபர்ஜாய் புயலால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாலைகளில் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்களை தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடந்தது குறித்து குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் செய்தியாளரிடம் பேசுகையில், "கட்ச் மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் இல்லை. தற்போது முந்த்ரா, ஜக்குவா, கோட்டேஷ்வர், லக்பத் மற்றும் நலியா ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. பிபர்ஜாய் புயல் காரணமாக தெற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் சாலையைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.